முகப்பு தினதியானம் செப்டம்பர் அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.