செப்டம்பர் 09
“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7
வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.
இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.
உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.