முகப்பு தினதியானம் அக்டோபர் நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.