அக்டோபர் 28
“இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து” லூக்கா 8:35
வசனத்தில் குறிப்பிட்டபடி ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்திருந்த ஏழை மனிதன் சிறிது நேரத்திற்குமுன்தான் சாத்தானுடைய கட்டுகளிலிருந்து விடுதலையானான். அவர் தேவனுடைய வல்லமையைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய பாதத்தருகே நன்றியுள்ளவனாக அமர்ந்திருந்தான். நாமும் ஜீவனுள்ளவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டுமானால், தேவனுடைய பாதத்தருகேதான் இருக்க வேண்டும். இந்த இடத்தை எவரும் பெறலாம். இப்போதும் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் அவர் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அவரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவோம். அவர் நம் எஜமானாக இருக்க நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளுவோம்.
ஆண்டவரின் பாதமே தயவும், அன்பும் நிறைந்த இடம். இங்கு நமக்கு எவ்வித பயமும் இல்லை. இங்குதான் ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். புதுப்புது காரியங்கள் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளலாம். நமக்கும் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தை இது காட்டுகிறது. நாம் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கிறோம் என்பதற்கு இது சாட்சி. அவர் பாதத்தருகே இருக்கும் நாம் எண்ணிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய இடம் இதுவே. அவருடைய பாதத்தருகே அமர்ந்து, அவருடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்வோம். என்னவாயினும் இவ்விடத்தை விட்டு அகலவேண்டாம். சாத்தானின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்விடத்தில்தான் நாம் தேவனோடு வாழும் வாய்ப்பைப் பெறுகிறோம். இவ்விடத்திலிருக்கும் பொழுதுதான் நமது வாழ்க்கை பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கையாகும்.
இயேசுவின் பாதத்தில் அமர்வேன்
இகத்திலும் பரத்திலும் பெறுவேன்
எண்ணற்ற ஆசீர்வாதங்கள்தனை
என்றுமவரைப் போற்றிப் பாடுவேன்.