செப்டம்பர் 28
“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” ஆதி. 39:21
யோசேப்பு, தன் தகப்பனைவிட்டுப் பிரிக்கப்பட்டு, தன் வீட்டையும் விட்டு, அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான குற்றம் சாட்டப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் கர்த்தர் அவனோடு இருந்தார். நம்முடைய வாழ்வில்கூட சோதனைகள் பெருகியிருக்கும்போதுதான் தேவ தயவு காணப்படும். நாம் நீதியினிமித்தம் துன்பப்படும்பொழுதுதான் சிறப்பு ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். யோசேப்புக்கும்கூட அவனுக்கு வந்த கஷ்டங்கள் எல்லாவற்றையும் தேவன் நன்மையாக மாற்றினார். கர்த்தர் நம்முடன் இருந்தால், சிறைச்சாலையும் அரண்மனையாகும். துயரங்களிலும் பண்டிகை ஆசரிக்க முடியும். யோசேப்போடு தேவன் இருந்ததால் அவனை ஆதரிக்க, ஆறுதல்படுத்த, அவனோடு பேச சிறைச்சாலை தலைவனிடத்தில் தயவு கிடைக்கப்பண்ணினார். அவனுக்குச் சிறப்பு வரங்களைக் கொடுத்தார்.
அவனை எகிப்தை ஆளத்தகுதிப்படுத்தித் தம்முடைய நாமத்தில் துன்பப்படுகிற யாவருக்கும் ஆறுதல்படுத்தும் பாத்திரமாகவும் ஆக்கினார். விசேஷித்த மகத்துவத்தோடு கர்த்தர் யோசேப்போடே இருந்தார். மேன்மையடையும்முன் அவன் தாழ்த்தப்பட்டான். சிறைச்சாலைதான் அரண்மனைக்குப் போகும் நேர்வழியாகும். சிலுவையின் வழியாகத்தான் மகுடம் பெறமுடியும். கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆளவேண்டுமானால், அவரோடு பூலோகத்தில் துன்பத்தை அனுபவிக்கவேண்டும். பிரியமானவரே, கடமை உம்மை எங்கு வேண்டுமானாலும், துன்பம் உம்மை எங்கு துரத்திடினும் கர்த்தர் உம்மோடு இருப்பார். கர்த்தராகிய சூரியன் நமது வாழ்விலிருக்கும்பொழுது, எந்தத் துன்பமாகிய மேகம் நம்மை மூடினாலும் நாம் அஞ்சத் தேவையில்லை. தேவ சமுகம் நமக்கு இன்பமாக இருக்கும். எவ்வளவு அருமையான உண்மை இது.
நீர் என்னோடிருப்பதே
எந்நாளும் என் வாஞ்சை
எத்துன்பம் வந்திடினும்
முறுமுறுக்காது ஏற்பேன்.