செப்டம்பர் 26
“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10
தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம்? அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம்? நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
அவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.
பொய் சொல்ல தேவன் மனிதரல்ல
அவர் என்றும் வாக்கு மாறாதவர்
சத்தியபரன் அவரையே என்றும்
நம்பி நாம் பேறு அடைவோம்.