செப்டம்பர் 20
“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11
தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.
ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.
நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.