அக்டோபர் 02
“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37
ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.