முகப்பு தினதியானம் அக்டோபர் நீர் எங்களுடனே தங்கியிரும்

நீர் எங்களுடனே தங்கியிரும்

அக்டோபர் 06

“நீர் எங்களுடனே தங்கியிரும்” லூக்கா 24:29

இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் இயேசுவானவர் அவர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை. வழியில் அவர் அவர்களுக்கு தேவ வசனத்தை விளக்கிக் கூறினார். பின்பு வேறு வழியிற் செல்பவர்போல் காணப்பட்ட அவரை அவர்கள் நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காம் ஆயிற்று, பொழுதும் போயிற்று, என்று அழைத்தார்கள். ஆண்டவருடைய சமுகத்தை அனுபவித்த எவரும் இப்படிச் சொல்லக்கூடும். உண்மையான தேவ பிள்ளைகள் அவர் தங்களைவிட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தாங்கள் தேவனோடு இருக்கவும், அவர் அவர்களோடு இருப்பதையும் விரும்புவார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். நாம்தான் அதை உணருவதில்லை.

இந்த நாளில் அவருடைய சமுகம் உங்களோடு இல்லை என்றாலும் உடனே அதைத் தேடுங்கள். எங்களோடு தங்கும் என்று கெஞ்சுங்கள். உங்கள் உள்ளத்தில் அனல்மூட்டி எழும்பும்படி அவரைக் கெஞ்சிக்கேளுங்கள். உங்களைவிட்டு அவர் கடந்துபோக விடாதேயுங்கள். அவரும் எப்போதும் நம்மோடேயே இருக்க விரும்புகிறார். நீங்கள் அவரை விரும்புவதிலும் அதிகமாக அவர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரை விட்டுவிடாது பற்றிக்கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் சமுகத்தை அனுபவித்ததுண்டா? அதைக் கண்டு உணருகிற சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அவர் சமுகமே மோட்சம். அவருடைய பிரசன்னம் இன்பம். நமது துக்க துன்பங்களை நீக்கும் வழி அவரே. அவர் நம்மோடிருப்பின் மகிழ்வோம். களிகூருவோம். அவரை நாம் கண்டு பிடித்துப் பற்றிக்கொண்டால் மரணபரியந்தம். ஏன், மரணத்திற்குப் பின்னும் சந்தோஷம் பெறுவோம்.

இயேசுவே என்னிடம் வாரும்,
வந்தென்னை ஆசீர்வதியும்
நீங்காதிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருளாயிற்றே.