அக்டோபர் 25
“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” உன். 5:16
ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள் அவரைப் போற்றிப் பாடுவார்கள். தேவகுமாரனாக அவரைப் பார்த்தால், அவர் முற்றிலும் அழகுள்ளவர். அவர் மனுஷரெல்லாரிலும் அழகுள்ளவர். அவருடைய அழகில் தெய்வத்தன்மை உண்டு. அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர். அவர் அளவில்லா ஞானமும், மகத்துவமும் உள்ளவர். அன்பும், இரக்கமும் உள்ளவர். அழகற்றது ஒன்றும் அவரிடமில்லை. அவரே பூரண அழகுள்ளவர்.
திருச்சபையாகிய மணவாட்டி, அவரைக் குறித்துக்கூறிய சாட்சி, அவருடைய தீர்க்கதரிசி, ஆசிரியர், இராஜா ஆகிய பதவிகளுக்கும் பொருந்தும். உலகம் முழுவதையும் அவர் ஆண்டுகொண்டிருப்பதாலும், சகலமும் அவர் பாதங்களின்கீழ் இருப்பதாலும் அவரை இவ்வாறு போற்றிப் புகழலாம். வானத்திலும், பூமியிலும் அவருடைய பணிகளைக்குறித்தும் இச்சாட்சியைக் கூறலாம். அவர் கிருபை செய்வதில் வல்லவர். ஆகவே அவர் அழகுள்ளவராகக் காண்பிக்கப்படுகிறார். அவர் நம்மைச் சுத்திகரித்து, உயர்த்திக் கனப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.
பிரியமானவனே, நீ ஆண்டவரை அழகுள்ளவராகக் காண்கிறாயா? அவருடைய அழகில் நீ மகிழ்ச்சி கொள்ளுகிறாயா? அவரில் களிகூரு. அவரில் பேரின்பம் பெறு. அவர்மேல் சார்ந்து வாழ்ந்திரு. எவ்வளவாய் நீ அவரை அறிந்து கொள்ளுகிறாயோ, அவ்வளவாய் நீ அவரை நேசிப்பாய். அவரை நேசிக்கும் அளவுக்கு நீ பாக்கியவானாவாய்.
கர்த்தர் மகிமை நிறைந்தவர்,
மா அழகுள்ளோர், அவரை நேசிப்பது
பேரானந்தம். அவரை அறிந்தோர்
எவருமவரைப் புகழ்ந்து போற்றுவார்.