முகப்பு தினதியானம் உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது

உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது

நவம்பர் 09

“உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது” லூக்கா 21:28

நீங்கள் பெறப்போகிற பூரண மீட்புக்காக உங்கள் மீட்பர் பூமியில் வந்து மீட்பின் கிரயத்தை செலுத்தினார். இப்போது அவர் பிதாவின் வலது பக்கத்தில் வானத்திலும் பூமியிலும் அதிக அதிகாரமுள்ளவராக வீற்றிருக்கிறார். அவர் வெகு சீக்கிரம் மீண்டும் வந்து உலகை நியாயந்தீர்ப்பார். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நித்திரையடையலாம். உங்களுக்கு அருமையானவர்கள் கல்லறைகளில் நித்திரையாக இருக்கலாம். ஆனால் கொஞ்கக் காலத்தில் இயேசு வருவார். அப்பொழுது மரித்துப்போன உங்களுக்கன்பானவர்களை உயிரோடு எழுப்புவார். நீங்களும் ஒருவேளை கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், தூசியை உதறித்தள்ளி சாவாமை என்னும் சிறப்பு ஆடையணிந்து கொண்டெழும்புவீர்கள். தேவனுடைய பிள்ளைகளாக மகிமை, வல்லமை முழுமையை அடைவீர்கள். பரம பிதாவினால் மீட்கப்பட்ட முழுக் குடும்பத்துடனும் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள். அப்பொழுது உங்கள் மீட்பு முழுமையாகும்.

இப்பொழுது அம்மீட்பு சமீபித்திருக்கிறது. ஒவ்வொரு நாள் முடிய முடிய, அது நெருங்கி வருகிறது. அந்த நாளின்மேல் விருப்பம் கொள்ளுகிறோமா? அப்போஸ்தலனைப்போல ஆவியானவரின் முதற்பலனைப் பெற்ற நாமும், நம்முடைய மீட்பாகிற புத்திர சுவகாரத்தைப் பெறுகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோமா? அப்படியானால், உங்களது மீட்பு நெருங்கியிருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் விசுவாசிகளான போது, உங்கள் மீட்பு சமீபமாயிருந்ததைக் காட்டிலும், இப்போது அது மிக சமீபமாயிருக்கிறது.

மீப்பின் நாள் கண்டு மகிழ்வேன்
மீட்பரோடு பாக்கிறனாய் வாழ்வேன்
பரலோகத்தில் எல்லாருடனும் நான்
பரமனைத் துதித்து மகிழுவேன்.