ஓகஸ்ட் 23
“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3
தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.
அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.
மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.