ஏப்ரல் 10
“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15
துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.
நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.
தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.