முகப்பு தினதியானம் அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற

அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற

நவம்பர் 15

“அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற” ரோமர் 4:6

இந்த வசனம் வேதத்தில் மறைந்து கிடக்கிற இரகசியங்களில் ஒன்று. மனிதன் சொந்த நீதியற்றன். கிருபையினாலே தேவன் மனுஷனை அங்கீகரிக்கிறார். இயேசு நாதர் பூமிக்கு வந்து தேவனுடைய கிருபையையும், நீதியையும் விளங்கப்பண்ணினான். அவர் சம்பாதித்துத் தந்த புண்ணியம் அளவற்ற பலனுள்ளது. நம்முடைய ரூபமெடுத்து, நமக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக இருந்து இந்தப் புண்ணியத்தைச் சம்பாதித்தார். நமக்காக அதை அங்கீகரித்து அதை நம்முடையதாகவும் எண்ணுகிறார். நாம் ஒரு நற்கிரியை செய்தவற்கு முன்னே, நம்முடைய கிரியையை அப்படியே கவனியாமல், நாம் விசுவாசிக்கிற நேரத்தில் அந்த நீதியை நம்முடையதாகவே நினைக்கிறார். அந்த நீதி நம்முடையது. இலவசமாக நாம் அதைப் பெற்றோம். நாமே சம்பாதித்ததுபோல் அது நமக்குரியதாகிவிடுகிறது. இதனாலே நாம் நீதிமான்களாகிறோம். பாக்கியம் பெறுகிறோம்.

இதனால், நாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம்மேல் எக்குற்றமும் காட்டப்படாதிருக்கிறோம். எந்தக் குற்றத்திற்கும் அவர் மன்னிப்பு அளிக்கிறார். நீதியுள்ள தேவன் சகல குற்றங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்குகிறார். நம்மை நீதிமான்களென்று முடிவு செய்து தண்டனைகளுக்கு நீங்கலாக்குகிறார். இவ்விதமாய் விசுவாசிக்கும் நீதியுண்டாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறார்.

பிரியமானவர்களே, நீங்கள் சாத்தானால் சோதிக்கப்படும்போதும் பயங்களும், திகில்களும் உங்களை மூடும்போதும் உங்கள் பழைய பாவங்கள் உங்கள்முன் தோன்றி அச்சுறுத்தும்போதும், எந்த நற்கிரியையுமில்லாமல் தேவன் நீதியைக் காட்டுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

இயேசுவே, உமது கிருபையே
மகா மேன்மையுள்ளதே
விசுவாசத்தால் பெறும்
நீதியிலே எம் குற்றம் நீக்கிடும்.