முகப்பு தினதியானம் செப்டம்பர் என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.