மார்ச் 16
“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10
இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம். அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.
முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.