நவம்பர் 21
“உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா” 2.இராஜா. 10:15
இக்கேள்வி மிகவும் அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. சில மனிதர் மிகவும் ஞானமாகவும் நன்றாகவும் பேசுவார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ உபதேசம்பற்றிய தெளிந்த அறிவும் உண்டு. கிறிஸ்தவ வழிகளைச் சரியாக அறிந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள் நேர்மையானவையல்ல. இதை வாசிப்பவரே, உமது இதயம் சீரானதாயுள்ளதா? செய்த பாவத்திற்காக அது நொறுக்கப்பட்டுள்ளதா? அது தீமையை வெறுக்கிறதா? இயேசு கிறிஸ்துவை உறுதியாகப்பற்றிக் கொண்டிருக்கிறதா? கர்த்தருடைய வசனத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளதா? வசனத்தில் கூறப்பட்டபடி தேவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிக்கிறதா? உம் இருதயம் பரிசுத்தவான்கள் மேலும் அன்பு காட்டுகிறதா? கர்த்தருடைய ஊழியத்தில் பக்தி வைராக்கியம் கொண்டுள்ளதா?
அல்லது, அது தேவனை விட்டுத் தூர விலகி வாழ்கிறதா? கிறிஸ்துவில் ஐக்கியங் கொள்ளவில்லையா? உலகக் காரியங்களிலேயே திருப்தி கொள்கிறதா? வேதாகமத்தை ஏற்காமல் அவமதிக்கிறதா? தேவ கிருபையைக் குறித்து அசட்டையாயிருக்கிறதா? பாவத்தால் ஏற்படும் குற்ற உணர்வால் கலங்குகிறதா? உம் இதயத்தின் நிலையைச் சோதித்துப் பாரும்.
கிறிஸ்துவினண்டைக்கு உம் இதயம் வராமற்போனால் அது செம்மையாய் இருக்காது. ஆகையால் அது அடிக்கடி கெத்செமனே, கல்வாரி காட்சிகளைத் தியானிக்க வேண்டும். உம் இருதயம் செம்மையாக இல்லை என உணர்ந்து நீர் துக்கப்பட்டதுண்டா? நீர் உமது இருதயத்தை இயேசுவின் இரத்தத்தால் கழுவவேண்டும். அதை ஆண்டவருடைய சந்நிதியில் படைக்க வேண்டும். அப்பொழுது அவர் அதை செம்மை ஆக்குவார்.
என் மனம் செம்மையானதானால்,
பாவத்தை ஒரு நாளும் அது விரும்பாது
என் மனதில் கிறிஸ்து வருவாரானால்
அது தூய்மையாகி நலம் பெறும்.