அக்டோபர் 27
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23
இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.
நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.
எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.