நவம்பர் 11
“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3
புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.
பொன்போல் ஜோதி வீசுமட்டும்
என்னோடிரும் புடமிடுகையில்
சோதனை முடிந்த பின்னர் உம்
முகம் என்னில் காண்பீரே.