டிசம்பர் 03
“தேவனே எங்களைச் சோதித்தீர்” சங். 66:10
நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் சந்திப்பதுதான் கடினம். வீண்பேச்சுப் பேசுகிறவர்கள் அதிகம் தவறு செய்பவர்கள். வீழ்ச்சிக்கு முன் அகந்தை வரும். இந்நேரத்தில் நமது தகுதியை முற்றிலும் தள்ளிவிட்டு, தேவனுடைய உண்மையான வாக்கை நம்பினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நமது வாழ்வில் இருண்ட நேரங்களில், சாத்தானாகிய விரோதி, இயற்கை உபாதைகளான நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, நமது மனதிலுண்டாகும் திகில், வாழ்வில் துன்பம், இழப்பு ஆகியவை சோதனைகளாய் வரும். சோதனைகளில்லாதபோது சிலர் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர். ஆனால் சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.
இளம் கிறிஸ்தவர்களில் சிலர் ஆரம்பத்தில் தங்களது கிறிஸ்துவ வாழ்க்கையில் அனலுள்ளவர்களாயிருக்கும்போது, வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களிடம் குறைகளைக் காண முயற்சிக்கின்றனர். ஆனால், தாங்களும் மற்றவர்களைப்போலவே பெலவீனர்தான் என்று தாங்கள் சோதிக்கப்படுகையில் அறிந்து கொள்ளுவர். நம்முடைய தன்மையை தேவன் நமக்குக் காட்டினால்தான் நாம் அதை மெய்யாகத் தெரிந்து கொள்ள முடியும். நமது இருதயம் திருக்குள்ளது. பெலவீனமானது. ஆண்டவர் நமக்கு தரும் சோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை சோதித்து நம்மைத் தம்மிடம் நெருக்கமாக சேர்க்கிறார்.
கர்த்தாவே, உமது வழிகள் எல்லாம்
ஆச்சரியமானவை, என்னைப் புடமிட்டு
என்னைத் தூய்மையாக்கியருளும்
என்னை உம்மிடம் சேர்த்தருளும்.