ஏப்ரல் 04
“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12
கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.
தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.
யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.