டிசம்பர் 01
“ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை” எபி. 4:16
தேவனின் கிருபைதான் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நமக்கு நன்மையும் செம்மையுமானவைகளையெல்லாம் தருகிறது. ஓவ்வொரு நாளும் நமக்குத் தேவ கிருபை தேவை. ஆனாலும் சில நேரங்களில் அது அதிகமாக தேவைப்படுகிறது. நம்மைப் பெருமையிலிருந்து துணிகரமான பாவத்திலிருந்தும் தடுத்துக் கொள்ள நமக்கு தேவனுடைய கிருபை தேவையாயிருக்கிறது. நாம் முறுமுறுத்து நமது ஆன்மீக வாழ்வில் பின்வாங்கிப் போகாமலிருக்க தேவ கிருபை நமக்குத் தேவை. சோதனைகளாகிய கண்ணிகளுக்குத் தப்புவதற்கும், மகிமையுடன் நாம் மரிப்பதற்கும் தேவ கிருபை நமக்கு வேண்டும். தேவன் எவ்விதத்திலும் கிருபை செய்வார். தகுதியற்ற நமக்குக் கிடைக்கும் அவருடைய உதவி தேவ கிருபையால்தான் கிடைக்கிறது. நமது ஜெபங்களின்மூலமாக நாம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே, நாம் இரக்கம் பெறவும், ஏற்ற நேரத்தில் சகாயம் பெறவும் கிருபையைத் தேட வேண்டும். நமது சுயபெலத்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது. நமது சொந்த ஞானமும் பயனற்றது. எல்லாவற்றிற்கும் தேவ கிருபைதான் அவசியம் என்று உணர்ந்து எப்பொழுதும் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவ கிருபையில்லாமல் நாம் வாழ முடியாது. நமது வாழ்நாள் முழுவதும் நாம் அதை வாஞ்சையோடு தேட வேண்டும். இதை நாமும் இச்சிந்தையுடன் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நமக்குத் தந்தருளுவார். நம்மைக் காப்பாற்றி, வாழ வைத்து, நோய் நொடியிலிருந்து மீட்டு, பெலன், ஜீவன் ஈந்து நம்மை நடத்தி வருவது தேவ கிருபைதான். ஆண்டவரே, என்னை ஜெப ஜெயவீரனாக்க உமது கிருபையை எனக்குத் தாரும்.
தேவ கிருபை, ஆசீர்வாதம்
தினமும் எங்களில் தங்கிட
தேவனே அருளும் உம் ஈவை
தினமும் எங்களைக் காத்திட.