டிசம்பர் 05
“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7
நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.
அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.
இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.