அக்டோபர் 19
“அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” புல. 3:22
நண்பனுடைய அன்பு ஒரு நாள் முடிந்துவிடும். உறவினரின் பாசம் முறிந்துவிடும். தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பு மாறிப்போகும். ஆனால், தேவனுடைய இரக்கம் ஒருக்காலும் மாறாது. சொல்லிமுடியாத இந்த இரக்கத்திற்கு முடிவே இல்லை. அது வற்றாப் பெருங்கடல். மறையாக் கதிரவன். சிலவேளைகளில் அது இருண்டதுபோல் தோன்றும். அதினின்று நன்மை வராததுபோல் தோன்றும். ஆனால் அது எப்பொழுதும்போல் பிரகாசமுள்ளதாகவும் மேன்மையுள்ளதாகவே இருக்கும்.
நண்பரே, இன்று அவர் உனக்கு இரக்கம் காட்டியிருக்கிறார். இப்பொழுதும் உன்மீது உருக்கமான அன்பைக் காட்டியிருக்கிறார். தாராளமாகக் கிருபை அளிக்கிறார். அவர் தமது பிள்ளைகளிடத்தில் இரக்கம் காட்டுவதுபோல் எவருக்கும் காட்டுவதில்லை. ஆகவே, நீ எங்கிருக்கிறாய் என்பதைப் பார்த்துத் திரும்பு. வறண்ட பூமியையும், உலர்ந்த ஓடைகளையும் விட்டுத் திரும்பு. பயத்தையும், திகிலையும் விட்டுவிடு. தேவ இரக்கத்திற்காகக் காத்திரு. இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றிய மக்கள் உண்ண உணவில்லாதிருந்ததைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் அல்லவா? உன்மீதும் அவர் மனதுருகுவார். உன் பலவீனங்களில் உன்னைத் தாங்குவார். உன் துக்கத்தை நீக்குவார். உனது ஆன்மாவை வலுப்படுத்துவார். தம்முடைய மகிமையில் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவார். ஏனென்றால், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. இக்கூற்று மாறாத உண்மையானது. உனக்கும் எப்பொழுதும் அவருடைய இரக்கம் கிடைக்கும். வேத வசனம், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்று கூறுகிறது. அது என்றும் பொய்யாகாது.
ஐயங்கள் பயங்கள் பிடித்தாலும்
கவலை என்னை வாட்டினாலும்
தேவ இரக்கம் என்றும் உள்ளதே
அவர் தயவால் அவற்றை வெல்வேன்.