முகப்பு தினதியானம் அக்டோபர் முடிந்தது

முடிந்தது

அக்டோபர் 14

“முடிந்தது” யோவான் 19:30

எவைகள் முடிந்தன? ஆண்டவருடைய பாடுகள் முடிந்தன அவருக்கு முன்கூட்டியே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் முடிந்தன. அவருடைய துன்பங்கள் முடிந்தன. பூலோகத்தில் அவர் செய்ய வேண்டியிருந்த ஊழியம் முடிந்தன. மக்களுக்கு அவர் செய்ய வேண்டியிருந்த பணிகள் முடிந்தது. பாவிகளை நீதிமான்களாக்ககச் செய்ய வேண்டிய கிரியைகள் முடிந்தன. நியாயப்பிரமாணம் நிறைவேறி முடிந்தது. பாவத்திற்கு நிவாரண பலியாய்ச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன.

சாத்தான் முறியடிக்கப்பட்டான். சாபங்கள் நீக்கப்பட்டன. மேய்ப்பனின் இரத்தத்தால் ஆடுகள் பாவமறக் கழுவப்பட்டாயிற்று. சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்கும் இரட்சிப்புக்கும் நித்திய அஸ்திபாரம் போடப்பட்டது. சகல பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பமாயிற்று. நமக்காகப் பரிந்து பேசும் பிரதான ஊழியம் கிடைக்கப்பெற்றது. மரணத்தின்மீது வெற்றி ஏற்பட்டது. உலகம் நித்திய ஜீவனை அடைய ஜீவ நதி ஊற்றாகப் புறப்பட்டது. அனைத்தையும் சேர்த்துக் கூறவேண்டுமானால், பிதாவே எல்லாப் பணிகளையும் செய்து முடித்தார். சமாதான உடன்படிக்கையைச் செய்தார். நமக்குப் பெரிய இரட்சிப்பை உண்டுபண்ணினார். பிதாவின் காரியங்களைத் தேவ குமாரன் பூமியில் செய்து முடித்தார். பிதாவை மகிமைப்படுத்தினார். எனவே அவர் முடிந்தது என்கிறார். நமக்கிட்ட கட்டளைகளைச் சரியாக நாமும் செய்து முடிப்போமாக.

முடிந்த தெனக்கூறியே
ஆண்டவர் இயேசு மரித்தார்
மீட்பை நிறைவேற்றியே
சாத்தானை வென்றார்.