ஜனவரி 23
“யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.” ஏசாயா 41:14
மற்றவர்களின் பார்வையில் நாம் சிறியவரும் அற்பமுமாய்க் காணப்பட்டாலும், நாமே நம்மைக் குறித்து பலவீனர்களென்று அறிந்தாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே என்கிறார். நாம் ஒரு பூச்சியைப்போலிருந்தாலும் ஜெபிக்கிற யாக்கோபைக் போலிருந்தால் பயப்படத் தேவையில்லை. ஏன் பயப்படவேண்டும்? பயம் ஆத்துமாவைச் சேதப்படுத்தி சத்துருவைத் தைரியப்படுத்துகிறது. அது சிநேகிதரைக் கலங்கடித்து தேவ நாமத்தைக் கனவீனப்படுத்துகிறபடியால் பயப்படவேண்டாம். இப்படி தேவன் அடிக்கடி நம்மைப் பார்த்து சொல்வது எத்தனை அருமையானது. வேதத்தில் இந்த வார்த்தை எங்கே காணலாம். நாம் ஏன் பயப்படவேண்டும்? ஓடுகிறதற்கு வேகமும், யுத்தத்திற்குச் சவுரியவான்களின் சவுரியமும் இருந்தால் போதாது, பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களாயிருந்தாலும் போதாது. தயவு அடைவதற்கு வித்வான்களின் அறிவும் போதாது.
அவைகளுக்கெல்லாம் தேவ செயலும் காலமும் நேரிட தேவனே விழித்திருப்பார். நாம் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமது சிநேகிதர், அவர் எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மேல் கவலை கொள்கிறார். நமது தேவைகளைச் சந்திக்கிறார். எல்லா விசுவாசிகளையும் அவர் பார்க்கிறார். நம்மை நம்புகிற ஒவ்வொரு பூச்சியையும் சுகமாய் வாழ பாதுகாக்கிறார். அவர் வல்லமை சர்வ வல்லமை. அவரின் ஞானம் சர்வத்தையும் அறியும். அவரின் அன்புக்கு இணையாக ஒன்றுமில்லை. அவர் உன்னைக் காப்பவர். ஆகவே யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.
உன்னை யார் இகழ்ந்தாலும்
உன் தேவனை நம்பு
விழுந்த உன்னை தூக்குவார்
யாரும் உன்னை மேற்கொள்ளார்.