மார்ச் 04
“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29
கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.
நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.
தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.