யூலை 11
“என்னை நோக்கிப் பாரும்” சங். 119:132
ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோபைத் தாழ்மைப்படுத்தி கிதியோனைப் பலப்படுத்தி, பேதுருவை மனந்திரும்பச் செய்து, சாகிற ஸ்தேவானைச் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பிற்று. பார்ப்பது என்பது தயவு காட்டுவது ஆகும். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுஞ்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் நம்முடைய கண்களை அவரண்டைக்கு உயர்த்த வேண்டும். அவர் நம்மைப் பார்த்து நமதுமேல் கிருபையாய் இருக்க வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கி கெஞ்ச வேண்டும்.
அன்பர்களே, தேவனுடைய கண் உங்கள் மேலிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அவர் இரக்கமாய் உங்களைக் கண்ணோக்குவாரானால் உங்கள் பயங்கள் நீங்கிப்போம். உங்கள் அந்தகாரம் விலகும். நீங்கள் ஒளியினாலும் பரிசுத்த நம்பிக்கையினாலும் நிரம்பப்படுவீர்கள். இவ்வளவு நாம் தேவனிடத்தில் கேட்கலாமென்று நினைக்கிறீர்களா? நாம் பெற்றுக்கொள்வதற்கு இது அதிகமென்று நினைத்தாலும் அவர் கொடுப்பதற்கு இது அதிகமல்ல. நாம் அவரோடு ஒப்புரவானோம் என்று இது காட்டுகிறது. அவர் நம்மேல் அக்கறை வைத்துள்ளாரென்று இது நிரூபிக்கும். இது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இந்த இரவில் நீயும்கூட என்னை நோக்கிப் பாரும் ஆண்டவரே என்று சொல்லி படுக்கைக்குச் செல்.
உமது அடிமையைப் பாரும்
மன்னித்து மகிழ்ச்சி அளியும்
உமது சமுகம் காட்டியே
அமர்ந்து தூங்கச் செய்யும்..