முகப்பு தினதியானம் அவர் நம்மேல் இரங்குவார்

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.