ஏப்ரல் 05
“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19
இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.
பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.
கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.
விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.