முகப்பு துண்டு பிரதிகள் பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!