ஏப்ரல் 08
“நம்மை இரட்சித்தார்” 2.தீமோ. 1:9
இரட்சிப்பு இம்மையிலும் கிடைக்கும் நன்மை. நாம் கிறிஸ்துவுக்குள் வந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கி நம்முடைய பாவத்தை மாற்றி நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இப்போதும் விசுவாசத்தின் பலனாக ஆத்தும இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் பொல்லாப்பினின்றும், சத்துருக்களினின்றும், பயங்களினின்றும் முற்றிலும், நீங்கலானவர்களல்ல. என்றாலும் நமது இரட்சிப்பு நிச்சயந்தான். நாம் இப்பொழுது பூரணமாய் கிறிஸ்துவைப்போல் இல்லை. ஆனால் அவர் இருக்கிற வண்ணமாய் அவரைப் பார்ப்போம். ஆதலால் அவரைப் போலிருப்போம்.
ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறபடியால், தேவனோடு நடந்து தேவனுக்காக வேலை செய்து, தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டும். கிறி;ஸ்து நம்முடையவர். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம். தேவன் நம்முடையவர். அவருடைய குணாதிசயங்களுக்கும், ஆளுகைக்கும் குறைவுவராமல் அவர் நமக்காகச் செய்யக்கூடியதையெல்லாம் செய்வார். இந்த நிச்சயத்தை அறிந்தவர்ப்போல நாம் வாழ வேண்டும். அப்போஸ்தனாகிய பவுல் அப்படித்தான் ஜீவித்தான். இந்த நிச்சயம்தான் வேலைக்கு நம்மைப் பலப்படுத்தி, போராட்டத்தில் நம்மைத் தைரியப்படுத்தி, அடிமைக்குரிய பயத்தையெல்லாம் நீக்கி, கர்த்தருக்கென்று முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க உதவும். நமக்கு உறக்கம் வரும் வரையிலும் படுக்கையிலே இதைப்பற்றியே தியானிப்போம். தேவன் என்னை இரட்சித்திருக்கிறவர். எனக்கு அவர் சுகத்தையும், ஐசுவரியத்தையும் பட்சமுள்ள உறவினர்களையும், வீட்டு வசதிகளையும் ஓருவேளை கொடாதிருப்பினும், நித்திய இரட்சிப்பினால் என்னை இரட்சித்துள்ளார்.
கிறிஸ்துவால் மீட்கப்பட்டேன்
மேலானதையே நாடுவேன்,
ஸ்தோத்தரித்துப் போற்றுவேன்
அன்பின் சிந்தையில் நடப்பேன்.