முகப்பு தினதியானம் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

மே 24

“‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” கலா. 3:11

விசுவாசத்தினால்தான் அவர்கள் நீதிமான்களாகிறார்கள். பாவத்தைப்பற்றி உணர்வடைந்தவர்களானதால் தங்கள் பெலவீனத்தை உணர்ந்து¸ சுவிசேஷத்தை அறிந்து¸ கிறிஸ்துவின் கிரியைகளைப் பற்றி பிடித்து கொள்ளுகிறார்கள். அவரின் நீதி அவர்களுடையதானபடியால் எல்லா குற்றத்திற்கும் நீங்கலாகுகிறார்கள். நீதிமான்களாக்கப்பட்டு பிழைத்திருக்கிறார்கள். அதாவது ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டு¸ சகல ஞான நன்மைகளுக்கும் உரியவர்களாகி சுயாதீனராய் நடக்கிறார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிழைக்கிறார்கள். விசுவாசத்தினால் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனோடு சஞ்சரிக்கிறார்கள்.

தேவ குமாரன்மீதுள்ள விசுவாசத்தினாலேதான் அவர்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் வார்த்தைகளைப் பற்றிப்பிடித்து அவருடைய கிரியையின்மேல் மட்டும் சாய்நது¸ அவர் சத்தியத்தின் பேரில் நம்பிக்கை வைத்து அவரின் நிறைவிலிருந்து தங்களுக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். வருவாய்க்காக அல்ல¸ அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கூலி வாங்கும் வேலைக்காரர்கள் போலல்லாமல் பிதாவின் வீட்டில் உள்ள பிள்ளைகளாய் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேவனை நம்பிப் பெற்றுக்கொள்ளாதபோதும் கொடுப்பாரென்று எதிர்ப்பார்த்து¸ வாக்களிக்கப்பட்டது தாமதிக்கும்போதும் அதற்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் இருளானாலும்¸ மனதுக்கு வருத்தமானாலும் இவர்கள் முன்னேறி செல்கிறார்கள். சில வேளைகளில் அவர்களுக்கு இருக்கிறதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தம்தான். எல்லாம் குளிர்ந்து விறைத்து செத்துப்போனதுபோல உள்ளே காணப்பட்டாலும் புறம்பே எல்லாம் அவர்களுக்கு மாறாகக் காணப்பட்டாலும்¸ அச்சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை நம்பி¸ தங்கள் ஆண்டவரை உறுதியாய்ப் பிடிக்கிறார்கள்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடுவார் எந்நாளும்.