யூன் 13
“நீ விசுவாசத்தால் நிற்கிறாய்.” ரோமர் 11:20
இயேசுவில் வைக்கும் விசுவாசம் மகா விசேஷமானது. அதை அவருக்குமேல் வைக்காமல் மற்ற எதன்மீது வைத்தாலும் அதை அதிக மேன்மைப்படுத்திவிடுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தனாலாகிறது. நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தினால் நம் இதயத்தில் இடம் பெறகிறது. நாம் போராடுகிறோமா? அது விசுவாசப் போராட்டம். நமது விசுவாசம் தான் உலகை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசத்தினால் இயேசுவை நோக்கிப் போர்க்கிறோம். அவரை ஏற்றுக்கொள்ளுகிறோம். அவரோடு சஞ்சரிக்கிறோம். அவரில் நிலைக்கிறோம். ஏனெனில் விசுவாசத்தின் மூலமாய் தேவ வல்லமையினால் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்து நமக்கு எப்படியிருக்கிறார்? அவர் நமக்காக எதையெல்லாம் செய்தார்? அவர் நமக்கு என்னத்தைக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறதினால்தான் நாம் நிற்கிறோம். வருத்தமான பாதையில் நடக்க கிறிஸ்துவிடமிருந்து வெளிச்சத்தையும், போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் வேண்டிய பெலனையும், அவசரமான எந்தச் சூழ்நிலைக்கும் தேவையான கிருபையையும், விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்கிறோம். ஜீவனுள்ள தேவனை விட்டுப் போவதால் அவிசுவாசமாகிய பொல்லாத இருதயத்தை அடையாதபடி எச்சரிக்கையாய் இருப்போமாக. சந்தேகங்களுக்கு விரோதமாகப் போராடி தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தைரியம் அடைவோமாக. நாம் பொதுவாக தேவனுடைய வசனத்தில் அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. இரட்சகர் முடித்த கிரியையில் மிதமிஞ்சி நம்பிக்கை வைப்பவர்களுமல்ல. தேவனுடைய உண்மையையும் அவ்வளவு உறுதியாய்ப் பிடிப்பவர்கள் அல்ல. ஆயிலும் விசுவாசத்தில் வல்லவர்களாகி, ஆபிரகாமைப்போன்று தேவனுக்கு மகிமை செலுத்துகிறவர்களாய் இருப்போமாக.
சத்துருக்கள் சீறி வந்தாலும்
இயேசுவே என் கன்மலை
அவர் கொடுக்கும் பலத்தால்
நிற்பேன் அவரே துணை.