யூன் 26
“நானே வழி.” யோவான் 14:6
இந்த வசனம் ஒரு நல்ல உவமானம். இரட்சகர் நமக்குத் தேவை எனக் காட்டுவதற்கு இந்த உவமானத்தைப் பயன்படுத்துகிறார். நாம் தேவனுக்குத் தூரமானவர்கள். நாம் பாவிகளானதால் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்குச் சுபாவப்படி வழி இல்லை. ஆனால் இயேசுவோ நமக்கு மத்தியஸ்தராகி நம்மைப் பிதாவிடம் வழி நடத்தும் வழியானார். இந்த வழிதான் நம்மைப் பாவத்திலிருந்தும், பரிசுத்தத்திற்கும், கோபாக்கினைக்குரிய பயத்தினின்று நித்திய சிநேகத்திற்கும் நம்மை நடத்துகிறது. தேவனை அறிவதற்கும், தேவனோடு ஒப்புரவாகுதற்கும், தேவனால் அங்கிகரிக்கப்படுவதற்கும், தேவனோடு சம்பந்தப்படுவதற்கும், தேவனை அனுபவிப்பதற்கும், தேவனுக்கு ஒப்பாவதற்கும், தேவ சமூகத்தண்டையில், அவர் மகிமையண்டைக்கும் நடத்த இயேசுதான் வழி.
எல்லாப் பாவிகளுக்கும், அவரை ஏற்றுக்கொள்ளுகிற யாவருக்கும் அவர் வழியாகத் திறக்கப்பட்டுள்ளார். அவரை நம்புகிற யாவருக்கும் அவரே நல்வழி. வரப்போகிற ஆக்கினைக்குத் தப்ப ஓரே வழி. ஆனால் நாமோ சுபாவப்படி அவர் வழியை விட்டு விலகிப்போனோம். ஆவியானவர் இதை நமக்கு உணர்த்துகிறார். இயேசுவைப் போலொத்த வழிதான் நமக்கு வேண்டுமென்று அறிகிறோம். விசுவாசத்தினால் அந்த வழிக்கு உட்படுகிறோம். கண்ணீரால் அந்த வழியை நனைக்கிறோம். அந்த வழியில் நாம் பிரயாணப்படவேண்டும். அவர் வழியில் செல்லும் எவரும் சுகத்தோடு தாங்கள் சேரும் இடம் அடைவர். அன்பர்களே! நாம் நிற்கிற இடம் நல்ல இடம். நாம் நடக்கிற பாதை நேரானது. நாம் தொடங்கி இருக்கும் பயணத்தின் முடிவு நித்திய ஜீவன்.
நீரே வழி உம்மால்தான்
பாவம் மாம்சம் ஜெயிப்பேன்
உம்மையன்றி பிதாவிடம்
சேரும் வழி அறியேன்.