நவம்பர் 12
“என்ன செய்தேன்?” எரேமி. 8:6
ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.
நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.
குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.