முகப்பு தினதியானம் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.