ஓகஸ்ட் 13
“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” உபா. 14:1
என்ன ஒர் ஆச்சரியமான உறவிது. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! இவர்கள் யார்? அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இது இவர்களுக்குள்ளே புது சுபாவத்தையும், புது விருப்பங்களையும், புது ஆசைகளையும், புது எண்ணங்களையும், புது செய்கைகளையும் உண்டுபண்ணும். இவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள். இவர்கள் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஒரு பிள்ளை தகப்பன் சொன்னதை நம்பி தகப்பன் கற்பிப்பதைச் செய்து தகப்பன் அனுப்பும் இடத்துக்கும் சென்று, அவர் வாக்குமாறாதவர் என்றும், அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது. உன்னைச் சிநேகிதனற்றவனென்று சொல்லாதே. நீ அநாதை பிள்ளை அல்ல. அவர் உன் தகப்பன். ஒப்பற்ற தகப்பன். மாறாத தகப்பன். மனம் கலங்காதே.
உன் வறுமையில் பிதாவின் சம்பத்தையும், நிந்தையில் உனது கனமான உறவையும் உன் வியாதியில் பரம வீட்டையும் மரணத்தில் முடிவில்லா நித்திய வாழ்வையும் நினைத்துக்கொள். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள். நாம் எல்லாரும் இப்பொழுது பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
இந்தக் கிருபைத் தாரும்
அது என்னை நடத்தட்டும்
என் நா உம்மைத் துதிக்கும்
என் இதயம் உம்மை நேசிக்கும்.