முகப்பு தினதியானம் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

யூலை 12

“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14

இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.

இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.