எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்
நவம்பர் 25
“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16
ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.
தன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார்? நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வோம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.
பாவம் செய்தே வாழ்ந்திடேன்
பாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ
பரிசுத்தரே உம்திரு தயவால்
பாவியேன் முயல்வேன் என்றும்.