முகப்பு வலைப்பதிவு பக்கம் 40

கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்

ஜனவரி 09

“கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்” லூக்கா 23:33

இன்று காலை கெத்செமனேக்குச் சொன்றோம். இந்த கல்வாரியைப் பார்த்துச் செல்வோம். கிறிஸ்து தேவகரத்திலிருந்து நேராய் கெத்செமனேக்கு வந்து துன்பங்களை ஏற்கத் தொடங்கினார். கல்வாரியில் பாவிகளால் பாடுபடுத்தப்பட்டார். அடிக்கக் கொண்டுபோகிற ஆட்டுக்குட்டியைப்போல கொண்டு செல்லப்பட்டார். அவர் களைத்து சோர்ந்து, பலவீனப்பட்டு பாரா சிலுவையைத் தோளில் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து போகிறதைப் பாருங்கள். கொலைக்கள் மேட்டிற்கு ஏறிப்போனார் சிலுவை மரத்திலே தமது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அடிக்க ஒப்புக்கொடுத்தார். அவரின் எலும்புகள் எல்லாம் ஆணிகளால் பிக்கப்பட்டன. வலியால் தவித்து கதறி துடிதுடிக்கும் மேனியை பாருங்கள். அவர் உடல் முழுதும் காயங்கள், கண்கள் இருண்டு கன்னங்கள் குழி விழுந்திருக்கின்றன. தலையில் முள்முடி. சரீரம் இரத்தத்தால் நனைந்திருக்கிறது. பயங்கர மரண அவஸ்தைப்படும் அருன்நாதரின் முகத்தைப் பாருங்கள்.

“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சொல்லும் சத்தத்தைக் கேளுங்கள்.இயேசு பட்ட பாடுகளைக் காட்டிலும் வேறு பாடுகள் உண்டா? பாவமில்லாதவர் நமக்காக பாவமாக்கப்பட்டார். குற்றமற்றவர் நமக்காக குற்றவாளிப்போலானார். நீதிமான் அநீதிமான் போலானது ஏன்? மணவாட்டியை மணவாளன் மீட்டுக்கொள்ளவே நாம் மரிக்காதிருக்கும்படிக்கு, அவர் நமக்கு பதில் மரித்தார். என்ன ஒரு தேவ அன்பு! அனுதினமும் நாம் கல்வாரிக்கு சென்று ஆண்டவரின் பாடுகளைத் தியானிப்போமாக. அன்பினால் துன்பங்களுக்குள்ளான காட்சி இதுவே.

மரணம் வரும் போதும்
என்ஆவி பிரியும் போதும்
கல்வாரியை பார்ப்பேன்
சிலுவையைத் தியானிப்பேன்.

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08

“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12

தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.

இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.

இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07

“அவனைக் கனப்படுத்துவேன்”  சங். 91:15

என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து தன் கண்களையும் மனதையும் இரட்சகர்மேல் உறுதியாய் வைப்பானானால் கர்த்தர் அவனைக் கனப்படுத்துவார். அப்பொழுது அவன் வருத்தங்களை பொறுமையோடு சகித்து மற்றவர்கள் சொல்லும் நிந்தைகளையும் பழிச்சொற்களையும் நிராகரித்து துன்பநாளிலும்கூட பிதாவின் முகமலர்ச்சியை அனுபவிப்பான். கர்த்தரோ அவனைச் சந்தித்து அவனுடன் இனிமையாய்ப் பேசி அவனைச் சூழ்ந்திருக்கும் சகல துன்பங்களையும் மறந்துவிடும்படி செய்து அவன் வாழ்க்கையின்மேல் நோக்கமாயிருப்பார். வியாதியில் ஆற்றித்தேற்றி சுகத்தில் அவனை நடத்திக்கொண்டு போவார். வறுமையில் திருப்தியைக் கொடுத்து வாழ்வில் அவனுக்கு உதாரகுணத்தைத் தருவார். வாழ்நாளில் அவனுக்கு வேண்டியதைத் தந்து அவனை ஆதரித்து மரணத்தில் உயிர்ப்பித்து தம்மண்டையில் ஏற்றுக்கொள்வார். உயிரோடிருக்கும்போது ஆசீர்வாதமாயிருந்து மரித்த பிறகு சிங்காசனத்துக்கு அருகில் வைக்கப்படுவான்.

அன்பானவர்களே! உங்களை வெறுத்து மாம்சத்தை வென்று உலகத்துக்கு மேலாக எழும்பி விசுவாசத்தினால் வாழ்ந்து தேவனுடன் சஞ்சரித்துக் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அவரும் உங்களைக் கனப்படுத்துவார். உங்களின் கவலைக்குரிய காரியங்களை அவருக்கு ஒப்புவித்துப் பாருங்கள். அவருடைய இராஜ்யத்தையும் மகிமையையும் விரிவடையச் செய்யப் பாருங்கள். அப்போது தேவன் உங்களை ஆசீர்வதித்து மன்னாவால் உங்களைத் திருப்தியாக்குவார் என்று அறிவீர்கள்.

என் நிமித்தம் இம்மையில்
தன்னை வெறுப்பவன்
எனதன்பை ருசித்து
என் மகிமையை காண்பான்.

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4

“எல்லாம் உங்களுடையதே”  1.கொரி. 3:21

என் பிரிய சகோதரரே, கேளுங்கள். ‘தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?” இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடைய உபயோகத்துக்கும் நம்முடைய பிரயோஜனத்துக்கென்றிருக்கிறது. நமது கரங்களில் அது இல்லாவிட்டாலும் இன்னும் அவைகள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகளை விசுவாசத்தினால் அறிந்து அனுபவிக்கவும், நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு வாக்குத்ததத்ங்களில் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தத வேளையில் நமக்குக் கொடுக்கப்படும். கிறிஸ்துவானவர் இரண்டாந்தரம் பாவமன்றி இரட்சிப்பளிக்கவரும்போது சகலம் நமக்குக் கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர். இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், பரமகாரியங்களைப் பார்த்தாலும், இனிவரும் காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், பூமிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும், சகலமும் நம்முடையதென்றே திட்டமாய்ச் சொல்லலாம்.

தேவன் நம்முடைய பங்கு, இயேசு நம்முடைய மணவாளன், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன், பூமி நம்முடைய நித்திய வீடு. நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா? சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் ‘நான் உன் தரித்திரத்தை அறிவேன். ஆனாலும், நீ ஐசுவரியவான்” என்று அவர் நம்மைப் பார்த்துத் திட்டமாய்ச் சொல்லலாம்.

உலகப் பொருள் போகினும்
அவர் உன் பங்காமே
ஒன்றுமற்றவனாயினும்
அவர் உன் சொந்தமாமே.

தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே

ஜனவரி 03

“தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே”  1.தீமோ 2:5

மனுஷன் அநேக மத்தியஸ்தர்களை ஏற்படுத்திக் கொள்கிறான். மத்தியஸ்தர் ஒருவர்தான். தேவன் ஒருவரைத்தான் அங்கீகரித்திருக்கிறார். ஒரே மத்தியஸ்தர் போதும். இயேசு கிறிஸ்துதான் அந்த ஒருவர். அவர் செய்த பிராயச்சித்தம் அளவற்றது. அது நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி, நீதிக்கு திருப்தியுண்டாக்கி, தேவனுடைய லட்சணங்களையெல்லாம் மகிமைப்படுத்திற்று. அது என்றைக்கும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களைப் பூரணப்படுத்திற்று. அது தேவனுக்கு சுகந்த வாசனையான பலியாயிற்று. இயேசு செலுத்தின இந்த ஒரு பலிமூலமாய்தான் தேவன் பாவிகளை ஏற்றுக்கொண்டு மன்னிப்பளிக்கிறார்.

தேவன் உன்னை அங்கீகரிப்பதற்கு வேறொன்றையும் தேடாதே. இயேசுவின் வழியாய்ப் போ. அவரை மட்டும் பிடித்துக்கொள். நீ எவ்வளவு பாவம் நிறைந்தவனாய் இருந்தாலும், அவர்மூலமாய் நீ தேவனோடு ஒப்புரவாகலாம் நமக்காகப்; பரிந்து பேசும் மத்தியஸ்தர் ஒருவராகிய இயேசு போதும். நமக்காக மன்றாட கிறிஸ்துவானவர் எப்பொதும் மாறாதவராயிருக்கிறார். பிதா அவர் கேட்கிறதை மறுக்கிறதேயில்லை. அவுர் சுபாவதே அன்பு. இரட்சிப்பதே அவர் விருப்பமும் வேலையுமாய் இருக்கிற. அந்த வேலையில் அவர் ஆனந்தம் கொள்கிறார். ‘தமதுமூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்போதும் உயிரோடிருக்கிறவர். ஆகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்” ஆகையால் இயேசுவின் மூலமாய்த் தேவனண்டைக்குப் போக உன்னை ஏற்றுக்கொள்வது நிச்சயம் சந்தேகமின்றி உன்னையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார்.

பிதாவின் சமூகத்தில்
மன்றாடி நிற்கிறார்
அவரிடம் சொன்னால்
உன் மனு கேட்கப்படும்.

இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்

ஜனவரி02

“இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” ஆதி. 29:35

நன்றிகேடுபெரும் பாதகம். ஆனால் இது வெகு சாதாரணமான பாவமாகிவிட்டது. நாம் நன்மைகளைப்பெற்றுக்கொள்ளுகிறோம். நன்றி செலுத்தாமல் அவைகளை அனுபவிக்கிறோம்.நன்மைகளுக்கு தேவனைத் துதிக்காமல் இருப்பதால் அவைகள் நம்மை விட்டுஎடுக்கப்பட்டுப் போகின்றன. நாம் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து சொல்லாதஎத்தனை உபகாரங்களை நாம் பெற்றனுபவித்திருக்கிறோம்! ஸ்தோத்திரபலி இடுகிறவன்என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் பெற்றுக்கொண்டநன்மைகளைக் குறித்துச் சிந்தித்து, நம்முடைய நன்றிக்கேட்டுக்காகத்துக்கப்பட்டு லேயாளைப்போல் ‘இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” என்றுசொல்லுவோம். இப்படி சொல்வது இம்மைக்குரிய நன்மைகளுக்காகவும் இப்பொழுதே அவரைத்துதிக்கத் தொடங்குவோமாக. கர்த்தர் இதுவரையில் நமக்குச் செய்ததற்காகவும், இனிசெய்வேனென்று வாக்களித்திருகிறதற்காகவும், ஆதாமின்மூலமாய் நமக்குக் கிடைத்தநன்மைகளுக்காகவும், அதிலும் அதிகமாய் கிறிஸ்துவினாலே நாம் பெற்றுக்கொண்டநன்மைகளுக்காகவும் அவரைத் துதிக்கக்கடவோம். நமது தேவைகளையெல்லாம் அவர்சந்தித்ததற்காகவும் பணமின்றி இலவசமாய் அவைகளையெல்லாம் நமக்குத்தருகிறதற்காகவும் அவரை துதித்து நன்றி சொல்வோம். அவர் நமக்கு தருவது இன்பமானாலும்,துன்பமானாலும் சகலத்தையும் அன்பினால் தருகிறார்.

ஆதலால் அப்போஸ்தலன் புத்தி சொல்லுகிறபடி “எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம்”செய்யக்கடவோம். அப்படி செய்வதே கிறிஸ்துவுக்குள் உங்களைக் குறித்து தேவ சித்தம்.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமத்திலே எப்போதும்எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் செய்யுங்கள். ‘துதிசெய்வதே செம்மையானவர்களுக்குத் தகும்”

தேவனைத்துதி, உள்ளமே
அவர்ஈவை நினை
நன்மைகளைஎன்றும் மறவாதே
மௌனமாயிராதே.

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

Popular Posts

My Favorites

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

மார்ச் 02 "கர்த்தர் சமீபமாயிருக்கிறார்." பிலி. 4:5 இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று...