முகப்பு தினதியானம் அக்டோபர் பரிசுத்த ஆவியில் பலத்தினாலே

பரிசுத்த ஆவியில் பலத்தினாலே

அக்டோபர் 23

“பரிசுத்த ஆவியில் பலத்தினாலே” ரோமர் 15:13

பரிசுத்த ஆவியானவர் தெய்வத் தன்மையுள்ளவர். பிதாவுக்கும் குமாரனுக்கும் வல்லமையிலும், மகத்துவத்திலும், மகிமையிலும் ஒப்பானவர். இவர் கிரியை செய்வதில் வல்லவர். இவரது கிரியை இல்லாவிட்டால் இரட்சிப்பு இல்லை. அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடக்கிற நமக்கு அவர்தான் மறு உயிர் அருளுகிறார். நாம் அறியாமையினால் கலங்கி நிற்கிறபோது அவர்தான் நமக்குப் போதிக்கிறார். பாவத்தால் கெட்டுப்போயிருக்கிற நம்மை அவர்தான் தூய்மைப்படுத்துகிறார். நாம் சோர்ந்து மனமடிவாக இருக்கும்பொழுது நம்மைத் தூய ஆவியானவர் ஆற்றித்தேற்றுகிறார். ஜெபிக்க நமக்கு உதவி செய்து நமக்காகப் பிதாவினிடத்தில் பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். தேவனுடைய உயர் பண்புகள் நம்மில் மிளிரும்படி செய்கிறார். நமக்கு வல்லமையைத் தருகிறார். அது மங்கும்போது, அதைத் தூண்டிவிட்டு அதைப் பயனுள்ளதாக்கினார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அவர் சாட்சி கூறி, மீட்கப்படும் நாளுக்கென்று நம்மை உறுதியாக்குகிறார்.

நாம் அவருடைய கைகளின் கிரியை. அவர் வாசம் செய்யும் தேவாயலம். அவரே நம் போதகர். ஆறுதல் அளிக்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவருடைய வல்லமையே தேவ வசனத்தை அதிகம் பலனுள்ளதாக்குகிறது. கிறிஸ்து இயேசுவைப்போல நம்மை மாற்றுகிறவர் தூய ஆவியானவரே. அவரின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை. நாம் இடைவிடாது அவரைப் பற்றியிருக்க வேண்டும். கிறிஸ்து நாதரின் நீதியைக் கொண்டு நம்மைக் கிறிஸ்துவோடு ஒப்புரவாக்குகிறார். இன்றையத் தேவை தூய ஆவியானவர் தரும் இந்த அனுபவம்தான்.

தேவாவியே, நீர் வாருமே
வந்தென்முன் தங்கிடும்
பயம் இருள் நீக்கியே
அன்பால் எம் இதயம் நிரப்பும்.