முகப்பு தினதியானம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.