முகப்பு தினதியானம் அக்டோபர் அவர் பெரியவராய் இருப்பார்

அவர் பெரியவராய் இருப்பார்

அக்டோபர் 30

“அவர் பெரியவராய் இருப்பார்” லூக்கா 1:32

இயேசு நாதருடைய பிறப்பைக் குறித்துச் சொன்ன தேவதூதன் இவ்விதமாக அவரைப்பற்றி கூறினான். இது முழுமையாக நிறைவேறியது. இயேசு நாதர் எவ்வளவு பெரியவரென்று கூற முடியாது. அவருடைய மகத்துவமான தன்மை, இரத்தம் சிந்துதல் ஆகியவற்றில் அவர் பெரியவராயிருந்தார். அவரைக் குறித்த வேத வசனங்கள் அவருடைய சீடர்களின் எண்ணிக்கை, அவரின் வல்லமையான ஊழியம், இவையாவற்றிலும், அவர் பெரியவராயிருந்தார். அவர் காட்டின பரலோக இராஜ்யமும், அவருடைய உருக்கமான இரக்கமும் அவரைப் பெரியவராகக் காட்டின.

அவருடைய கிரியைகளிலும், அன்பிலும் அவர் பெரியவர். நமது எதிரிகளின்மீது அவரின் வெற்றியினாலும், அவர் பெரியவர். தமக்கு விரோதமானவர்களுக்கு அவர் அளிக்கும் தண்டனைகளைப் பார்க்கும்போது அவர் பெரியவர். அவருடைய வாக்குத் தத்தங்களினாலும், அவர் தரும் மன்னிப்பு, ஆசீர்வாதங்களினாலும் அவர் பெரியவர். அவருடைய பரிந்துபேசும் ஜெபமும் நமக்காக அவர் செய்த தியாகமும் அவரே பெரியவர் என சாட்சிக்கூறுகின்றன.

விசுவாசியே, உன் இரட்சகர் பெரியவராயிருப்பதால்தான் பாவிகளை இரட்சிக்கிறார். தமது தயவு கிருபை இரக்கம், மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அவர் பெரிய அளவில் தருகிறார். அவருடைய மக்கள் ஒன்று சேர்ந்து உலகம், பாவம், சாத்தான் ஆகியவற்றை ஜெயிக்கிற வல்லமையை அவரிடமிருந்து பெறுகிறபடியால் அவர் பெரியவர். தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி, யாவற்றிலும் வெற்றி சிறந்தபடியால் அவர் பெரியவர். மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த பெரியவர் அவர். எல்லாவற்றிலும் மேலான நாமம் உடையவராயிருப்பதால் அவர் பெரியவர்.

இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் வல்லவர்
இயேசுவே நீர் மீட்பர்
இயேசுவே என்றும் என்னோடிரும்.