முகப்பு தினதியானம் அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.