முகப்பு தினதியானம் டிசம்பர் என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

டிசம்பர் 13

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)

தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார். சில நேரங்களில் தமது பிள்ளைகள்மீதும் அவர் தமது கோபத்தைக் காட்ட நேரிடுகிறது. ஒரு பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பன் கண்டித்துக் கோபப்படுகிறான். அதுபோல தேவனும் கோபப்படுகிறார். அவர் எவரை அதிகமாக நேசிக்கிறாரோ, அவாகளைத் திருத்துவதற்காகக் கோபம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பு அவரைக் கோபம் காட்டச் செய்கிறது.

தேவன் கோபிக்கிறபொழுது துன்பங்களை அனுமதிக்கிறார். அவருடைய கோபம் ஒரு வினாடிதான் இருக்கும். அவருடைய மக்களின் முரட்டாட்டத்தின் நேரத்தில் அவர்கள் பேரில் அவர் கோபங்கொள்கிறார். அவருடைய கோபத்திற்கு ஆளானவர்கள் மனந்திரும்பி துக்கப்பட்டு, அவருடைய காலில் விழுந்து, பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சும்பொழுது, அவர் தமது கோபத்தை விட்டுவிடுகிறார். இன்னும் உன்னை நேசிப்பேன் என்கிறார். திரும்பவும் உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைத் தருவார். நீ எத்தவறையும் செய்யாதவன்போல உன்னை நேசிப்பார். உன் பாவத்தை மன்னித்து, மறப்பார். நாம் நமது பாவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்ற நினைவோடு இந்த இரவு படுக்கைக்குச் செல்வது நமக்கு இன்பமானதாக இருக்கும்.

ஆண்டவர் கொள்ளும் கோபம்
இருப்பது ஒரே கணம்தான்
ஆண்டவர் இரக்கம் நிறைந்தவர்
இது நமக்குக் கிடைத்த பேறுதான்.