முகப்பு தினதியானம் ஏப்ரல் சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.