முகப்பு தினதியானம் செப்டம்பர் அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18

“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில் பலன் இருக்காது. கிறிஸ்தவத்தில் அதிமுக்கியமான காரியம் அன்புதான். வரங்கள் மேன்மைகள், புகழ், தியாகம் இவை யாவுமே இருக்கலாம். ஆனால் அன்பு இல்லாவிடில் வெறும் கைத்தாளம்போலவே இருப்போம். சப்தமிடுகிற வெண்கலம் போலத்தானிருப்போம். மனித இயற்கை பிறர்மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறது. உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எத்தனையோ பேருக்கு நன்மை செய்திருக்கக்கூடும். பிறருக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் வந்ததா? அவர்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நீங்கள் நினைக்கவில்லையா? எங்கே உங்கள் அன்பு? அன்பு காட்டாத நீங்கள் கிறிஸ்தவர்களா?

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. இதுதான் நற்செய்தியின் சிறப்பு. தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு அவரைப் போன்றது. அன்பு நோயாளிகளை குணமாக்கும். துயரத்தில் ஆறுதல் தரும். ஆடையற்றோருக்கு ஆடையளிக்கும். பசித்தவர்களைப் போஷிக்கும். வறியவர்களை வசதியுள்ளவர்களாக்கும். வனாந்தரமான இவ்வுலகம் அன்பினால் செழிக்கும். அன்பினால் ஏவப்பட்டுக் கைமாறு கருதாது நன்மைகளைக் செய்யுங்கள். தூய்மையான மனதுடன் ஓருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? அன்பில் வளருகிறீர்களா? அல்லது பெருமை, பொறாமையில் வளருகிறீர்களா? தூய அன்போடு அன்புகூருங்கள். கிறிஸ்துவின் மக்களிடம் அன்புகூர்ந்து, அவர் தம்மைப் பகைத்தவர்களிடம் அன்புகூர்ந்ததுபோல் நடவுங்கள். அப்பொழுது பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

ஓர் இடம் போய்ச்சேருவோர்
ஒரே நம்பிக்கையுள்ளவர்கள்
அன்பின் கட்டால் ஒருமித்து,
மகிழ்ந்து வாழ்வார் சுகித்து.