முகப்பு தினதியானம் அக்டோபர் அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.