முகப்பு தினதியானம் தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.